ஹாங்காங், அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், ஓமன் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஓமன் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஓமன் அணியின் பந்துவீச்சாளர் கவார் அலி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் வீசிய 10ஆவது ஓவரின் முதல் பந்தில் அந்தோனியஸ் ஸ்டால் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கோலின் அக்கர்மேன் 15 ரன்களிலும் ரூலோஃப் வான்டர் மெர்வ் ரன் ஏதும் அடிக்காமலும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களான பிரெட் லீ, மலிங்கா, ரஷீத் கான் ஆகியோரது வரிசையில் 10ஆவது இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இவர், 3.3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது மிரட்டலான பந்துவீச்சினால் நெதர்லாந்து அணி 94 ரன்களுக்கு சுருண்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்களின் பட்டியல்
- பிரெட் லீ (ஆஸ்திரேலியா) - வங்கதேசம் எதிராக, 2007
- ஜேக்கப் ஓரம் (நியூசிலாந்து) - இலங்கைக்கு எதிராக, 2009
- டிம் சௌதி (நியூசிலாந்து) - பாகிஸ்தானுக்கு எதிராக, 2010
- திசாரா பெரெரா (இலங்கை) - இந்தியாவுக்கு எதிராக, 2016
- லசித் மலிங்கா (இலங்கை) - வங்கதேசம் எதிராக, 2016
- ஃபஹீம் அசரஃப் (பாகிஸ்தான்) - இலங்கைக்கு எதிராக, 2017
- ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்) - அயர்லாந்துக்கு எதிராக, 2018
- லசித் மலிங்கா (இலங்கை) - நியூசிலாந்துக்கு எதிராக, 2019
- முகமது ஹஸ்னைன் (பாகிஸ்தான் ) - இலங்கைக்கு எதிராக, 2019
- கவார் அலி (ஓமன்) - நெதர்லாந்துக்கு எதிராக, 2019