உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இதில், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்றுவருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னால் ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டாலும் போட்டி 20 ஓவர்கள் முழுமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இந்திய அணி ஏற்கனவே இந்தத் தொடரை கைப்பற்றியதால் அணியில் மூன்று மாற்றங்களுடன் கோலி களமிறங்குகிறார். தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, ஜடேஜா, கலீல் அஹமது ஆகியோருக்கு பதிலாக கே.எல். ராகுல், தீபக் சஹார், ராகுல் சஹார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியின் மூலம், ராகுல் சஹார் சர்வதேச கிரிக்கெட்டிக்கு அறிமுகமாகியுள்ளார்.