தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, மயாங்க் அகர்வால் இணை களமிறங்கியது. இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
அவர்கள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து அறிமுக ஜோடியாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதனைப்பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டது. இந்த இணையை பிரிக்க தென்னாப்பிரிக்க பவுலர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்தபோது போதுமான வெளிச்சம் இல்லாததால் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும், மயாங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் சர்மா - மயாங்க் ஆகிய இருவரும் வழக்கம்போல் அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகள் அடித்து ஆடினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வால் 204 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவுசெய்தார். டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இரண்டு வீரர்களும் சதம் அடிப்பது இது பத்தாவது முறையாகும்.
அதுமட்டுமல்லாது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சேவாக் - கம்பீர் (218) கூட்டணியின் சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் அடிப்பது இது மூன்றாவது முறை. முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் தொடக்க வீரர்கள் இந்த சாதனையை படைத்திருந்தனர்.