இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை, கடந்த 2009 ஆம் ஆண்டு அம்ரபலி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து தோனி அந்நிறுவனத்திற்காக 6 ஆண்டுகளாக பல விளம்பரங்களில் நடித்தும் வந்துள்ளார்.
ஆனால், 2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பலரும் தோனி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளனர். இதையடுத்து தோனி அம்ரபலி நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது அந்நிறுவனத்தில் விளம்பரத் தூதராக இருக்க போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு வழங்க வேண்டிய 40 கோடி வரையிலான தொகையை வழங்காமல் அந்நிறுவனம் காலதாமதம் செய்து வருவதாக அமரபலி நிறுவனத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் தனக்கு வழங்க வேண்டிய ரூ.22.53 கோடி அசல், மற்றும் ரூ.16.42 கோடி வட்டி தொகையை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமரபலி நிறுவனத்தில் முதலீடு செய்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அந்நிறுவனம் வீடுகளை வழங்காமல் ஏமாற்றியுள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனத்தின் இரண்டு தலைமை இயக்குநர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.