2019ஆம் ஆண்டின் உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், நான்காம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் வரும் 9ஆம் தேதி அரையிறுதியில் மோதவிருக்கின்றன.
இந்திய அணிக்கு விராட் கோலியும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் அணித்தலைவராக உள்ளனர்.
இதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இவ்விரு அணிகளுக்கும் அணித்தலைவராக இருந்தவர்கள் விராட் கோலியும், கேன் வில்லியம்சனும் ஆவர்.
அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 205 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி டக்வெர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயித்த 191 ரன்களை எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திக் கோப்பையையும் கைப்பற்றியது. 11 வருடங்களுக்கு முன் நடந்த இந்த வரலாறு மீண்டும் திரும்புமா, இந்தியா கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.