இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியில் மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமார் ரோச் இதையடுத்து, ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் கீமார் ரோச்சின் அபாரமான பந்துவீச்சில் மயங்க் அகர்வால் ஐந்து ரன்களுடன் அவுட் ஆனார்.
பின்னர், மூன்றாவது வரிசையில் களமிறங்கிய புஜாரா, அதே ஓவரில் இரண்டு ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்குத் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, நான்காவது வரிசையில் களமிறங்கிய கோலி ஒன்பது ரன்களுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 7.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 25 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்த இக்கட்டான நிலையில், கே. எல். ராகுல் - ரஹானே ஜோடி நிதானமான ஆட்டத்தை கடைப்படித்து அணியின் ஸ்கோரை உயர்த்திவருகிறது. இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையில் 24 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 37 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் இரண்டு, ஷனான் கெப்ரியல் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.