இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் பின் கேஎல் ராகு, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 52 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களையும் விளாசினார்கள்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் லிட்டன் தாஸ்(9), சௌமியா சர்கார்(0), ரஹிம்(0), முகமதுல்லா(8) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் களமிறங்கிய முகமது நைம் அதிரடியாக விளையாடி சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். அதன் பின் 48 பந்துகளில் 81 ரன்களை அடித்திருந்த நைம், ஷிவம் தூபேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள், சஹார், தூபேவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் வங்கதேச அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா அணி சார்பில் தீபக் சஹார் 3.2 ஓவர்களை மட்டுமே வீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் மொத்தமாக ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் தீபக் சஹார் இந்திய அணிக்காக சர்வதேச டி20 அரங்கில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியவர் பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி மூன்று டி20 போட்டிகள் கொண்டத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிறப்பாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தீபக் சஹார் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஏடிபி பைனல்ஸ்: பெரெட்டினியை வீழ்த்தினார் ஜோகோவிச்!