ஆஸ்திரேலியாவில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடருக்குத் தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அதில், ஒவ்வொரு அணியும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடும்.
அந்தவகையில், அடிலெயிடில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் அணியுடனான இந்திய அணியின் முதல் பயிற்சி போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், இன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற ஏழாவது பயிற்சி போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ஷிகா பாண்டே 24 ரன்களும் தீப்தி ஷர்மா 21 ரன்களும் அடித்தனர்.
மற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, ஜெமியா ராட்ரிகஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷமிலா கானெல், அனிசா முகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரன்குவிக்க முடியாமல் தடுமாறியது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டன.
பூனம் யாதவ் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை சைனெல் ஹென்ரி ஏழு ரன்களை சேர்த்தார். இதனால், அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்தில் நான்கு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஹேலே மேத்யூவ் ஆட்டமிழந்தார். அதன்பின் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைபட்டபோது, பூனம் யாதவ் பந்துவீச்சில் சைனெல் ஹென்ரி ஆட்டமிழந்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்து 105 ரன்களை எடுத்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் மூன்று விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:லாரஸ் விருதைனை வென்று புதிய உச்சம் தொட்ட ‘லிட்டில் மாஸ்டர்’!