கரோனா வைரசால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஐபிஎல் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகின்றன. இந்நிலையில், தான் ரசிகர்களின்றி காலி மைதானத்திலும் ஐபிஎல் விளையாடத் தயாராக இருப்பதாக சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களின் வருகை தேவைதான். அதேசமயம் அவர்களது உடல் நலமும் முக்கியம். அதனால் ரசிகர்களின்றி காலி மைதானங்களில் ஐபிஎல் விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தாலும் நான் அதற்கு தயாராக தான் உள்ளேன். ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்றால் ஒரு வீரராக அவர்களது ஆதரவு கிடைக்காதுதான். ஆனாலும், ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தப்பட்டசம் அவர்களுக்கு டி.வி.யில் பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்கும். நம் நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் சரியான பிறகு ஐபிஎல் நடத்தலாம்" என்றார்.