தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடத் திட்டமிட்டிருந்தது. ஆனால் டிச.04 ஆம் தேதி தொடங்கவிருந்த இத்தொடரின் முதல் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்கள் கருதி முதல் போட்டியை டிச.6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து அப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியினர் தங்கயிருந்த விடுதி ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் இப்போட்டியின்போதும் கரோனா அச்சுறுத்தல் இருந்ததினால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா தொடரை நடத்துவது குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: AUS vs IND: ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கும் இந்தியா!