தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 24, 2020, 12:55 PM IST

ETV Bharat / sports

கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்றாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி ட்ரா செய்தாலே விஷ்டன் கோப்பையை தக்க வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Eng vs WI, 3rd Test
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்றாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட விஷ்டன் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. செளதாம்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மான்சஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் எனத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று (ஜூலை 24) தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், ட்ரா செய்தாலே கோப்பையை தக்க வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு டெஸ்ட் தொடரை இழந்தது.

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் தொடரில் கோப்பையை கட்டாயமாக வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக கடைசி நேரத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆச்சர், இன்றைய போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலத்தை அளிப்பதாக உள்ளது.

அதேபோல், ஜிம்மி ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் என மற்ற வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். எனவே மிரட்டலான பவுலிங்கின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை கதிகலங்க வைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை முன்னணி பேட்ஸ்மேனான ஹோப் ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் 16, 9, 25, 7 ரன்கள் மட்டும் அடித்து ஒரு அரைசதம் கூட எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இருப்பினும், ஜெர்மெயின் பிளாக்வுட், கிரேக் பிராத்வெய்ட், ஷமார் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரின் பேட்டிங் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதுடன், சனோன் கேபிரல், கீமா ரோஸின் துல்லியமான பவுலிங் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அணிகளின் விவரம்:

இங்கிலாந்து:ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜிம்மி ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, ஜோ டென்லி, ஓலி போப், டாம் சிப்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜேம்ஸ் பிராசே, சாம் குர்ரான், பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், சாஹிக் முகமத், கிரேக் ஓவர்டன், ஓலி ராபின்சன், ஓலி ஸ்டோன்

வெஸ்ட் இண்டீஸ்:ஜேசன் ஹோல்டன் (கேப்டன்), ஜெர்மெயின் பிளாக்வுட், க்ருமா பொனர், கிரேக் பிராத்வெய்ட், ஷமார் ப்ரூக்ஸ், ஜான் கேம்பல், ரோஸ்டன் சேஸ், ராக்கீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், ஷனோன் கேபிரல், செமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஷாரி ஜோசப், ரேமன் ரீஃபர், கீமா ரோச்

இதையும் படிங்க: இந்தியா - ஆஸி. டி20 தொடர் நடைபெறுவது சந்தேகம் - பிசிசிஐ அலுவலர்

ABOUT THE AUTHOR

...view details