உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசின் கோரதாண்டவத்தால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கரோனா வைரசின் தாக்கம் ஒரு சில நாடுகளில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், கால்பந்து கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்சமயம் விளையாடி வருகிறது இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து நாட்டின் சௌதாம்டன் நகரில் கடந்த ஜூலை 8ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தனது முதல் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடினர். இருப்பினும் பின் வரிசை வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளாக்வுட் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தனக்கு பிடித்தமான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை கண்டிருந்தாலும், கரோனா அச்சத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.