ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இதற்காக தற்போதிலிருந்தே ஐபிஎல் அணிகள் தங்களை தயார்படுத்திவருகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாகவே சென்னை அணி அதில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்த கேப்டன் தோனி, அன்று மாலை முதலே தனது பயிற்சியை தொடங்கினார்.
அவரைத் தொடர்ந்து முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, பியூஷ் சாவ்லா உள்ளிட்டோரும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினர். அது குறித்த வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி - ரெய்னா ஆகியோர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. மேலும், மூன்றும், ஏழும் சேர்ந்து சிறந்த பத்தை இப்போதும் எப்போதும் உருவாக்குவர் என்று பதிவிடப்பட்டிருந்தது. தோனியின் ஜெர்சி எண் 7 என்பதாலும், ரெய்னாவின் ஜெர்சி எண் 3 என்பதாலும், அவர்கள் இருவரும் அணிக்கு சிறந்ததை அளிப்பார்கள் என்பதை அதில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
தோனி - ரெய்னா ஜோடி சிஎஸ்கே அணியில் மட்டுமல்லாது இந்திய அணிக்கும் பல போட்டிகளில் வெற்றியை தேடித் தந்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப்பின் தோனியும், 2018ஆம் ஆண்டுக்குப்பின் ரெய்னாவும் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளனர். எனவே இந்த வெற்றிக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு பின்னர் சேர்ந்து விளையாடவுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சுரேஷ் ரெய்னா, இதுவரை 193 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,368 ரன்களை எடுத்து இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.