உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 5,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் இந்த வைராஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வைரஸ் எளிதாகப் பரவும் என்பதால், பொது நிகழ்ச்சிகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனிடையே, ஐபிஎல் தொடரில் தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மார்ச் 2ஆம் தேதியிலிருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.
வலைபயிற்சியில் தோனி, ரெய்னா குறிப்பாக, உலகக்கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த தோனி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தயாராவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கினார். இவரின் வருகையால் மீண்டும் சென்னை அணி மீதான க்ரேஸும் கூடியுள்ளதோடு மைதானம் ரசிகர்களால் திருவிழாக்கோலம் பூண்டது.
தோனியும் பயிற்சிப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஐந்து சிக்சர்கள் விளாசி அசத்தினார். இதனால், ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக சிஎஸ்கே அணி வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் எதிர்காலம் என்ன?