இந்தியாவில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 வைரஸ் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு மோடி கேட்டுகொண்டார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியளித்துவருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், "பிசிசிஐ மூலம் கோவிட் -19 வைரஸை எதிர்த்து போராட பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், மாநில அரசுக்கு ரூ.50 லட்சமும் நன்கொடை வழங்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது.
கோவிட்-19 வைரஸிலிருந்து நாட்டின் குடிமக்களை காப்பாற்றும் போராட்டத்திற்கு இந்த நன்கொடை உதவியாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக பிசிசிஐ ரூ.51 கோடி நிதியுதவி வழங்கியது. இந்தியாவில் கோவிட்-19 வைரசால் இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா: கம்பீர் ரூ. 1 கோடி நிதி