தமிழ்நாடு

tamil nadu

பாலி உம்ரிகர் விருதைப் பெறும் பும்ரா!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கு பிசிசிஐ சார்பில் பாலி உம்ரிகர் விருது வழங்கப்படவுள்ளது.

By

Published : Jan 12, 2020, 1:26 PM IST

Published : Jan 12, 2020, 1:26 PM IST

பும்ரா, bumrah
பும்ரா, bumrah

அச்சுறுத்தும் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. 26 வயதே நிரம்பிய நிலையில் பும்ரா ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் சர்வதேச அளவில் பிற நாட்டு வீரர்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கும் பும்ரா, தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிவருகிறார். இவர் இதுவரை 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதுதவிர 2018ஆம் ஆண்டு இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

பும்ரா

அப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ரா, டெஸ்ட்டிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற பும்ரா முக்கியக் காரணமாக விளங்கினார்.

பும்ராவுக்கு பாலி உம்ரிகர்

மேலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணிலேயே தலா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதனிடையே இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் பாலி உம்ரிகர் விருது மிகவும் உயரிய விருதாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்தாண்டுக்கான பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழா இன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் 2018-19ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, பும்ராவிற்கு பாலி உம்ரிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே விருதை மகளிர் பிரிவில் பூனம் யாதவ் பெறுகிறார்.

முன்னாள் வீரர்களுக்கு விருது

மேலும், இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெறுகின்றனர்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா

இதுதவிர சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அசத்திவரும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வாலுக்கு சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது வழங்கப்படுகிறது. இதேவேளையில் டி20 போட்டிகளில் கலக்கும் வீராங்கனை ஷஃப்பாலி வர்மா சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு முன்னாள் வீரர்களும் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க: முதல் தர போட்டியில் 50 சதங்கள்... ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த புஜாரா!

ABOUT THE AUTHOR

...view details