கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளன. தற்போதைய சூழ்நிலை சரியான பிறகு மீண்டும் போட்டிகள் விளையாடும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை ஐசிசி அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு பந்துவீச்சாளர்கள் ஃபார்முக்கு திரும்ப நேரமாகும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கரோனாவுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது வழக்கம் போல் விளையாட பேட்ஸ்மேன்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று கடினமாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக, பந்துவீச்சாளர்கள் தங்களது வேகத்தையும் ஃபார்மையும் திரும்ப பெற போதிய காலமாகும். ஏனெனில் பொதுவாக ஒரு பந்துவீச்சாளருக்கு தனது முழு வேகத்தை அடைய ஆறு முதல் எட்டு வாரம்வரை நேரம் எடுக்கும். அது ஒருநாள் அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என எந்த விதமான போட்டிகளில் விளையாடினாலும் சரி. பந்துவீச்சாளர்களுக்கு முழு வேகத்தில் பந்துகளை வீசி போட்டிக்கு தயாராக எட்டு வாரம் ஆகும். எனவே கரோனாவுக்கு பிறகு பந்துவீச்சாளர்களின் நிலைமைதான் சற்று கடினமாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க:இந்த ஆண்டு இறுதியில் உறுதியான இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்...!