சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் ஆண்டின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான விருது இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் சர் கார்ஃபீல்டு சாபர்ஸ் கோப்பையையும் வென்றுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ், கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர், ஆஷஸ் ஆகிய தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். அதில் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் விளாசி எதிரணியின் வெற்றியை தடுத்து நிறுத்தி, இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
அதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தனது பேட்டிங்கால் பென் ஸ்டோக்ஸ் மிரட்டினார். அப்போட்டியில் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெறச் செய்தார். மேலும், அந்தத் தொடரில் மொத்தமாக 441 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.