ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ், முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதையடுத்து டேவிட் வார்னர், லாபுசாக்னே ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் வார்னர் 41, சாக்னே 63, வேட் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இப்போட்டியில சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், தனது வழக்கமான பாணியில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் டெஸ்ட் போட்டியில் தனது 28ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 257 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.