ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடிவருகிறது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நழுவவிட்ட இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி, இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் - ஷிகர் தவான் இணை களமிறங்கியது. இதில் ஷிகர் தவான் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க்கின் அபாரமான யார்க்கர் பந்தில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த கேப்டன் கோலியும் ஒன்பது ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் - சாம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து சஞ்சு சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். பின்னர் சிறப்பாக விளையாடிவந்த ராகுலும் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி வெற்றியைத் தக்கவைக்கும் இலக்கை நிர்ணயிக்குமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹெண்ட்ரிக்ஸ் பின்னர் வந்த வீரர்களும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இறுதியில் ரவீந்திர ஜடேஜா ஒரு சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே எடுத்தது.
பவுண்டரிகள் விளாசிய ஜடேஜா இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 51 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 44 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹெண்ட்ரிக்ஸ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2021இல் புதிதாக இரண்டு அணிகளா? பிசிசிஐ சொல்வது என்ன!