இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிவருகிறார். இவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது தனது 350ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார். அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் அதற்கடுத்த நாளே விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்காக களமிறங்கினார் அஸ்வின்.
இதனிடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே இறுதிப் போட்டியில், கர்நாடக அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு தொடக்க வீரர் முரளி விஜய் முதல் ஓவரிலேயே வெளியேறினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக அஸ்வின் களமிறங்கினார். ஆனால் அவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் எட்டு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அப்போது அஸ்வின் விதிகளை மீறி இந்திய அணியின் அடையாளத்துடன் இருந்த ஹெல்மெட்டை அணிந்திருக்கிறார். இதனால் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ அலுவலர் ஒருவர், பிசிசிஐயின் ஆடை அணியும்முறை விதியின் படி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் அச்சமயத்தில் தேசிய அணியின் அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு விதிகளை மீறி பயன்படுத்தும் வீரர்களுக்கு போட்டி நடுவர்கள் அபராதம் விதிக்கலாம் என்றும் அஸ்வின் விஷயத்தில் போட்டி நடுவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இப்போட்டியில் முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து விஜேடி முறைப்படி கர்நாடக அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.