தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2019, 5:28 PM IST

Updated : Sep 8, 2019, 6:38 PM IST

ETV Bharat / sports

ஒரு மெல்லிய கோடு; கோட்டுக்கு இந்தப் பக்கம் போனா மேட்ச் ஆஸி கையில... அந்தப் பக்கம் போனா இங்கி. கையில!

மான்செஸ்டர்: நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 309 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற ஆறு விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஆஷஸ் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றுக் கொண்டிருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், இப்போட்டியில் வெல்லும் அணி முன்னிலை பெறும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் இரட்டை சதத்தால் 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஸ்மித்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், கேப்டன் ஜோ ரூட்ஸ் ஆகியோர் தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. அதனால் அந்த அணி 301 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட்களுக்கு 200 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 100 ரன்கள் அடிப்பதற்கு எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. அபாரமாக பந்துவீசிய ஹெசல்வுட் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க்கும், பேட் கம்மின்ஸும் தங்களது பங்கிற்கு தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோரி பர்ன்ஸ்

இந்நிலையில், 196 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் வழக்கம் போல ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த மார்கஸ் ஹாரிஸும், மார்னஸும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஸ்மித் இந்த போட்டியிலும் தாக்குப்பிடித்து ஆடினார்.

சிறப்பாக விளையாடிய அவர் 82 ரன்கள் அடித்து இந்த ஆஷஸ் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவுசெய்தார். மற்ற அனைத்து வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துக்கு இரையாகினார்கள். ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

பென் ஸ்டோக்ஸ்

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 384 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்கை எதிர்நோக்கி ஆட வந்த இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் மூன்றாவது பந்தில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஜோ ரூட்டும் வந்த வேகத்தில் கம்மின்ஸிடம் வீழ்ந்தார். இதனால், இரண்டு விக்கெட்டுகளுக்கு 18 ரன்கள் எடுத்து இங்கிலாந்து திணறியது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி வீரர்கள்

இன்று இறுதி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஜெசன் ராயும், டென்லியும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராய் 31 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் போல்டானார். தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து அணி 30.2 ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ்தான் கைப்பற்றினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேஜிக் செய்த ஸ்டோக்ஸ் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தாலும், ஆட்டம் இங்கிலாந்து அணி பக்கமும் திரும்பலாம்.

ஸ்டார்க் - கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற ஆறு விக்கெட்டுகளையும், இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 309 ரன்கள் எடுக்க வேண்டும். வெற்றிபெறும் அணி 2-1 என்ற முன்னிலை பெறும். இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் ஆகியோர் உள்ளதால் இங்கிலாந்து அணி வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களும் சளைத்தவர்கள் இல்லை, ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகிய இரு சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. எந்த நொடி வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கு மாறும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

Last Updated : Sep 8, 2019, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details