பெங்களூரு:கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பவுண்டரி கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இதனையடுத்து நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி 2023 உலகக் கோப்பையில் காலடி எடுத்து வைத்தது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் பல அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால், இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றும் அணியில் ஒன்றாகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளைத் தழுவியது. இதனால் அந்த அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. குறிப்பாக பலம் வாய்ந்த நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியிடம் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணியுடனும் வரலாற்றுத் தோல்வியை அடைந்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் வரை யாரும் சரியான ஃபார்மில் இல்லாததால் அந்த அணி பல அதிர்ச்சி தோல்விகளைச் சந்தித்து வருகிறது. மேலும், பந்துவீச்சில் கூட ரீஸ் டாப்லியை தவிர்த்து எவரும் பெரிதாக விக்கெட்களை கைப்பற்றவில்லை. அவர் விளையாடிய 3 போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில், அவரும் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.