ஃபுஷோ:சீன ஓபன் தொடரை வென்றதன் மூலம், ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா நடப்பு பேட்மிண்டன் சீசனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 10 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசத்தல் ஃபார்மில் உள்ளார்.
பேட்மிண்டன் போட்டியில் முடிசூடா மன்னனாக ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா திகழ்கிறார். இந்த சீசனில் மட்டும் இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இவர் ஒன்பது சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசுரத்தனமான ஃபார்மில் உள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் ஃபுஷோ நகரில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இவர், தைவானின் சௌ தென் சென் (Chou Tien-Chen) உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமோட்டா 21-15, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் சௌ தென்னை வீழ்த்தி சீன ஓபன் பட்டத்தை வென்றார். நடப்பு பேட்மிண்டன் சீசனில் அவர் வெல்லும் 10ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
இதேபோல் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் சென் யூஃபை 9-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி பட்டம் வென்றார். இப்போட்டியில் ஒகுஹரா தோல்வி அடைந்ததன் மூலம், நடப்பு சீசனில் ஆறாவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார்.