ஊரடங்கு உத்தரவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சிறு, குறு தொழிலாளர்கள் வருமானமின்றி ஒருவேளை சாப்பாட்டிற்கும் சிரமப்பட்டுவருகின்றனர். பலர் பசி, உடல் வெப்பம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் பிகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலைய நடைமேடையில் குடிபெயர் தொழிலாளியான ஒரு பெண் இறந்துகிடந்தார். அதை அறியாத அவரது ஒன்றரை வயது குழந்தை, தனது தாய் தூங்குகிறாள் என்று நினைத்து அவரை எழுப்ப முயன்ற காட்சி அனைவரையும் கண்கலங்கவைத்தது.
அந்தக் காணொலியைப் பார்த்த நடிகர் ஷாருக்கான், அந்தக் குழந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது மீர் அறக்கட்டளை மூலம் வழங்குவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக மீர் அறக்கட்டளை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அந்தக் குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்துசேர உதவிய அனைவருக்கும் எங்களது நன்றி. இப்போது அந்தக் குழந்தை அவரின் தாத்தாவின் ஆதரவில் இருக்கிறது. குழந்தைக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக நடிகர் ஷாருக்கான், "பெற்றோரை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இழந்த அக்குழந்தைக்கு அனைத்து மனவலிமையும் கிடைக்க பிரார்த்திப்போம். குழந்தை எவ்வாறு உணரும் என்பது எனக்குத் தெரியும். அந்தக் குழந்தைக்கு நம்முடைய அன்பையும், ஆதரவையும் கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.