சென்னை:பல மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் பங்கேற்பதும், எல்லா வகையான உணர்வுகளை முகத்தில் கொண்டுவரும் திறமையும், ஒவ்வொரு நடிகருக்கும் இருக்க வேண்டிய பொதுப்பண்பு ஆகும். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர் யோகிபாபு, வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் பெரும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். விரைவில் வெளிவரவுள்ள 'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.
இந்திய மரபில் கூறப்படும், மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது கதைகள் இணைந்த ஆந்தாலஜி திரைப்படமாக 'நவரசா' உருவாகியுள்ளது.
குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆசை
காமெடி நடிப்பு, தற்போதைய குணச்சித்திர பாத்திரங்கள் குறித்து நடிகர் யோகிபாபு கூறியதாவது, " சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே மிகவும் விரும்புகிறேன்.
நகைச்சுவையில் சாதனை படைத்த , தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ், கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனைதை கவர்ந்துள்ளனர்.