தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 24, 2019, 6:08 PM IST

ETV Bharat / sitara

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அசத்திய விஜய் ரசிகர்கள் #BigilRelease

'பிகில்' திரைப்படம் விளையாட்டு வீராங்கனைகள் குறித்ததாகும். அந்த அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவியரும் எங்களைப் பொறுத்தவரை சிங்கப் பெண்கள்தான். ஆகையால் அவர்களது விளையாட்டு நலன் கருதி விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளதாக விஜய் ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

மதுரை: 'பிகில்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதை முன்னிட்டு மதுரையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அசத்தியுள்ளனர்.

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'பிகில்' படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

'பிகில்' படத்தின் ரிலீசை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது, பேனர்-கட்அவுட் வைப்பது என வழக்கமாகச் செய்யும் செயல்களைச் செய்யாமல் பல்வேறு நற்பணிகளைச் செய்துவருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையில் பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் சுவரொட்டிகள் ஒட்டுதல், மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல் என படத்தின் வெற்றிக்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலூர் மற்றும் இளமனூர் அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை விஜய் ரசிகர் மன்றத்தினர் வழங்கினர்.

மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கேரம் போர்டு, சதுரங்கப் பலகைகள், டென்னிஸ், பேட்மிண்டன் மட்டைகள், கைப்பந்து, கால்பந்து, கையுறைகள், ஜிம்னாஸ்டிக் விரிப்புகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை மதுரை வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் விஜய் அன்பன் கல்லாணை வழங்கினார்.

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்
இது குறித்து, நமது ஈடிவி பாரத் செய்திக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில்,

"நடிகர் விஜய் எங்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் இதுபோன்ற நற்பணிகளை நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். அதுமட்டுமன்றி 'பிகில்' திரைப்படம் விளையாட்டு வீராங்கனைகள் குறித்ததாகும். அந்த அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவியரும் எங்களைப் பொறுத்தவரை சிங்கப் பெண்கள்தான். ஆகையால் அவர்களது விளையாட்டு நலன் கருதி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த விளையாட்டு உபகரணங்களை மூன்று அரசுப் பள்ளிகளுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தற்போது பரவியுள்ள பேனர் கலாசாரம் ஒழிய வேண்டும் என்பதை நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஆகையால் அவரது ரசிகர்களான நாங்கள் அதனைப் பின்பற்றி மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டுவதை பெரும்பாலும் தவிர்த்து அந்தப் பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவியருக்கு இந்த விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளோம்" என்றார்.

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்
ஒருபுறம் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துதல் என்று இயங்கினாலும் மதுரை வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்வது சமூக செயற்பாட்டாளர்களிடையே பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details