கவிப்பேரரசு வைரமுத்துவின் 66ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவருக்கு படைப்புத் துறை சார்ந்தவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ”ஜூலை 13. இன்றைய தினம் தமிழ்மண் பூரித்து பொங்கி எழ வேண்டிய தினம். தமிழ்மண் பூப்பெய்திய நாள். கவியுலகம் பூத்த நாள் கவிப்பேரரசு வைரமுத்துவின் 66ஆவது பிறந்தநாள் என்று சொல்வதற்கே மகிழ்ச்சியாக உள்ளது.
இலக்கிய உலகமும் சரி, திரையுலகமும் சரி இதுபோன்ற ஒரு கவிஞரைக் கண்டெடுத்திருக்க முடியாது. மதுரை வைகை இன்று வறண்டு கிடக்கிறது. ஆனால், இவருடைய பெயரைச் சொன்னால் ஊற்றெடுக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சிலிர்த்துக்கொண்டு எழுகிற மேகங்கள் எல்லாம் மலைக்குப் பொன்னாடை போர்த்தும் அத்தகைய ஒரு நாள் இன்று.
வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குநர் இமயம் கவிஞர் கண்ணதாசனுக்குப் பிறகு திரையுலகில் மட்டுமல்ல இலக்கிய உலகில் இடைவெளி வந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருந்த நேரத்தில் பிறந்தவர்தான் வைரமுத்து. கரோனா ஊரடங்கு காரணமாக அவரை நேரில் சந்தித்து சால்வை போற்றும் ஒரு சடங்கு நிகழ்வாக நடத்த முடியவில்லை.
கரோனா என்னைப் பிரிக்காமல் இருந்தால் நான் உன்னில் இருப்பேன். நீ என்னில் இருப்பாய் என்பதை உலகறியும். இந்த கரோனா உலகில் உள்ள அனைவரையும் பாதிக்கும். ஆனால், உன்னை மட்டும் பாதிக்காது. ஏனென்றால், எதை எப்படி அளவோடு சாப்பிட வேண்டும். எதனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்துக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்தவன் நீ. கருவாட்டுக் குழம்பு எப்படி வைப்பது என்பது முதல் வயிற்றுப்போக்கு வரை வைத்தியம் தெரிந்த விஞ்ஞான கவிஞனாகவும் மண்சார்ந்த கலைஞனாகவும் இருக்கிறான். புத்தகம் எழுதினாலும் சரி, கவிதை எழுதினாலும் சரி ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு கவிஞனோடு பணியாற்றியது பெருமையாக உள்ளது. உலகத் தமிழர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும். வாழ்க நீடூழி" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:66ஆவது வயதில் அடியெடுத்துவைக்கும் கவிப்பேரரசு