சென்னை: தயாரிப்பாளர்களின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அதிருப்தி அடைத்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், ஏலே என்ற திரைப்படம் வெளியிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதனை கண்டிக்கும் விதமாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா கால சிரமங்களை கடப்பதற்கு முன்பே திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் பலவிதமான இன்னல்களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக விபிஎஃப், வெளிப்படத்தன்மை, வசதி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு தயாரிப்பாளர்கள் போராடி வரும் நிலையில், அவை எவற்றுக்கும் தீர்வு எட்டப்படவில்லை.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்கு தயாரிக்கப்படுகின்றவே தவிர, திரையரங்குகளுக்கு இரையாக்குவதற்கு அல்ல. ஓடிடி மூலம் நேரடியாக படங்களை வெளியிட்டு மக்களை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டபோது, கடன்சுமையை தவிர்க்க தயாரிப்பாளர்கள் அதை தேர்ந்தெடுத்தபோது திரையரங்க உரிமையாளர்கள் அபயக் குரல் எழுப்பினர்.
ஓடிடியில் நல்ல லாபம் கிடைத்தபோதும் சில தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் தங்களது படங்களை வெளியிட்டனர்.
அதே தயாரிப்பாளர் தனது நஷ்டத்தைப் போக்க திரைப்படம் வெளியாகி 14ஆவது நாள் ஓடிடியில் வெளியட முடிவு செய்த போது வாய்க்கு வந்தபடி திட்டி, தண்டமும் வைத்தார்கள்.