தமிழ் சினிமாவில் 1950ஆம் ஆண்டு வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் டிஎம் சௌந்தர்ராஜன். தமிழ் சமூகத்தின் வாழ்வையும், பண்பாட்டையும் தனது இசைப் பங்களிப்பின் மூலம் வளப்படுத்திய மக்களின் கலைஞன் இவர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களாக விளங்கிய எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிப் பாடல் பாடியுள்ளார்.
டிஎம்எஸ் பாடகராக மட்டுமில்லாது, 'பட்டினத்தார்',`அருணகிரி நாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி போன்ற மத்திய, மாநில அரசுகளின் பல உயரிய விருதுகளைப் பெற்று இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக திகழ்ந்த டிஎம்எஸ். 2013ம் ஆண்டு தனது 91 ஆவது வயதில், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
1946லிருந்து 2007ஆம் ஆண்டு வரை சுமார் 61 ஆண்டுகள் திரைப்பட இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத பாடகராக திகழ்ந்த டிஎம்எஸ்ஸின் நினைவு தினம் இன்று (மே 25) அனுசரிக்கப்படுகிறது.
1922ஆம் ஆண்டு மதுரையில் மீனாட்சி அய்யங்காரின் இரண்டாவது மகனாக பிறந்தவர் டிஎம் சௌந்தர்ராஜன். சிறுவயது முதலே ஏற்பட்ட இசையின் மீதான நாட்டத்தால், காரைக்குடி ராஜா மணி ஐயங்காரிடம் கர்நாடக இசையின் நுட்பங்களை 2 ஆண்டுகள் கற்றுத்தேர்ந்தார்.