மார்வெல் உலகின் லேடி சூப்பர் ஹீரோவான 'ப்ளாக் விடோ' திரைப்படம் ஜூலை 9ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியானது. ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான இப்படம் அன்றைய தினமே டிஸ்னி+ ஓடிடி தளத்திலும் வெளியானது.
திரையரங்கிலும் ஓடிடியிலும் ஓரே நாளில் வெளியான முதல் மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ப்ளாக் விடோ. கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை தள்ளிவைக்கப்பட்டது.
ப்ளாக் விடோ திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சனுடன் டேவிட் ஹார்பர், ரேச்சல் வெய்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மார்வெல் நிறுவனத்தில் நான்காம் கட்டப் படங்களில் ஒன்றான இப்படம் வெளியான சில தினங்களிலேயே 158 மில்லியன் டாலர்களை வசூலித்தது.
கரோனா பரவலுக்கு பின் திரையரங்குகளில் வெளியான படங்களில் அதிக வசூல் சாதனைப் படைத்த படம் 'ப்ளாக் விடோ'. திரையரங்கில் கிடைத்த அதே வரவேற்பு ஓடிடி தளத்திலும் இப்படத்திற்கு கிடைத்தது.
இந்தநிலையில், ஸ்கார்லெட் ஜோஹன்சன் தற்போது டிஸ்னி நிறுவனம் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், " 'ப்ளாக் விடோ' படத்துக்காக டிஸ்னி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் படம் பிரத்யேகமான திரையரங்கில் மட்டும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பொறுத்தே தன்னுடைய ஊதியம் நிர்ணயிக்கப்படும். தற்போது ப்ளாக் விடோ ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தனக்கு ரூ. 370 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கார்லெட் ஜோஹன்சனின் இந்த மனு தொடர்பாக டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கு நியாயமற்றது. கோவிட் -19, உலகம் முழுவதும் ஏற்படுத்திய பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் இந்த வழக்கை தொடர்ந்திருப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளது.
இதையும் படிங்க: 'ப்ளாக் விடோ' நடாஷாவாக இனி நடிக்கப்போவதில்லை - ஸ்கார்லெட்