சென்னை: 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால் விஷாலின் 'ஆக்ஷன்' படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக களமிறங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்(Post production) பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் இப்படத்தில் டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்ஷன் படத்துக்காக டப்பிங் செய்ததுதான், டப்பிங்கில் எனது முதல் அனுபவம். என் குரலை கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. எனது வாழ்வில் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். வில்லனாக கபீர் சிங் நடித்துள்ளார்.