இந்தி நடிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு தென்னிந்திய சினிமா புறக்கிணிப்படுவதாக பிரதமர் மோடிக்கு ராம்சரணின் மனைவி புகார் அளித்துள்ளார்.
அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில், அவருக்கு மிகவும் பிடித்த பாடலான 'வைஷ்ணவ ஜனதோ' பாடலை ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் முன்னணி திரையிசை பாடர்களைக்கொண்டு பிரத்யேகமாக உருவாக்கியது.
இந்த சிறப்பு பாடலை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி லோக் கல்யான் சாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிட்டார். அத்துடன் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, தாரக் மேதா குழுமம், இந்திய அரசின் கலாசார அமைச்சகம் ஆகியோர் தயாரித்திருந்த மூன்று வீடியோக்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் அமீர்கான், ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி, கங்கனா ரனாவத், ஆனந்த் எல்.ராய், உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். இது குறித்து நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாலிவுட் முன்னணி திரைப்பட பிரமுகர்களுடன் சந்திப்பு பலனளித்தது.
மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா வாயிலாக இளைஞர்களிடம் காந்திஜியின் எண்ணங்களை பரப்புவது உள்ளிட்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என்று தெரிவித்தார்.
இவரின் இந்த ட்வீட்க்கு தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''அன்புள்ள நரேந்திர மோடி அவர்களை...தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக அடைந்தற்காக மிகவும் பெருமை கொள்கிறோம். ஆனால் பெரும் ஆளுமைகள் மற்றும் கலாசார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கே கொடுக்கப்பட்டு தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றோம்.
நான் என்னுடைய உணர்வுகளை வலியோடு பதிவு செய்கிறேன். இந்த கருத்தை ஆக்கப்பூர்வமான முறையில் கூறுகிறேன். அவ்வாறே எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்'' என்று அதில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிங்க: 'சைரா'வுக்காக தமன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்!