சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கூட்டு குடும்பப் பின்னணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
வெளியீட்டிற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனது பேரன் வேத் திரைப்படம் குறித்து வெகுவாகப் பாராட்டியதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியையும் தனது மகள் உருவாக்கிய 'ஹூட்' ஆப்பின் மூலமே அவர் பதிவுசெய்திருந்தார்.
அண்ணாத்த படக்குழுவுடன் மனம்விட்டு பேசிய ரஜினி படக்குழுச் சந்திப்பும், தங்கச்சங்கிலி பரிசளிப்பும்...
அப்பாவுடன் இயக்குநர் சிவா மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கையும் விடுத்திருந்தார். அதன்பின்னர் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட 'அண்ணாத்த' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யாமல் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த், அவருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டினார். அதன்பிறகு இன்று (டிசம்பர் 23) படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அழைத்து அவர்களுக்கும் தங்கச்சங்கிலி அணிவித்துள்ளார் ரஜினி.
அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்டோருக்கு அவர் தங்கச் சங்கிலி அணிவித்துள்ளார். இந்தப் பாராட்டு நிகழ்வில் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் மனம் திறந்து ரஜினி பேசுவது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதையும் படிங்க:Yaanai Teaser: அருண் விஜய்யின் 'யானை டீசர்' வெளியீடு