தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தன்னைத்தானே செதுக்கியவன் இவன்: பிறந்தநாள் வாழ்த்துகள் 'தல'!

தன்னம்பிக்கை நாயகன் அஜித்தின் 48ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் அதிரடி 'அல்டிமேட்'டாக கொண்டாடி வருவது மட்டுமல்லாது, இணையத்தை 'தெறி'க்கவிட்டும் வருகின்றனர்.

அஜித்தின் 48-வது பிறந்தநாள்

By

Published : May 1, 2019, 5:32 PM IST

Updated : May 2, 2019, 1:39 PM IST

இவரது வாழ்க்கையின் சில தொகுப்புகளை இங்கு பார்ப்போம். தமிழ் சினிமா மாஸ், க்ளாஸ் என எத்தனையோ ஹீரோக்களைக் பார்த்திருக்கிறது. அதில் அஜித் ரொம்பவே வித்தியாசமானவர். தன் மனதுக்குப் பட்டதை செய்யும் அஜித்தின் செயலை ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்கிறார்கள் என்றால் அவர் மீதுள்ள அளவுகடந்த அன்பையே இது காட்டுகிறது.

வீட்டை விட்டு வெளியே வந்தாலே செய்தியாவது இவர் மட்டுமே! பள்ளிப் பருவத்தை பாதிலேயே நிறுத்திவிட்டு பைக் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின் பைக், கார் ரேஸில் காதல் ஏற்பட்டு பின் ஆங்காங்கே நடக்கும் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அதன் பின் "பாரு பாரு மியாமி குஷன் பாரு" எனத் தலையை ஆட்டிய படியே ஒரு விளம்பர படத்தில் எண்ட்ரி ஆவார் அஜித். இந்த விளம்பரத்தை பல முறை நாம் ஃபேஸ்புக்கில் பார்த்திருக்கிறோம். இதுதான் திரை துறைக்குள் அவர் நுழைவதற்கான திறவுகோல்.

எம்எஸ்வி, அஜித், விவேக்

அதன் பின் 'என் வீடு என் கணவர்' படத்தில் சிறு வேடத்தில் நடித்து, திரையுலகில் ஆரவாரமின்றி தன் தடத்தைப் பதித்தார் அஜித். அதற்குப் பின் 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்குப் படத்தில் நடித்து முழு நீள ஹீரோவானார். அமராவதி'யில் தொடங்கி, ‘உன்னைத்தேடி’ வரை அஜித் நடித்த பெரும்பாலான படங்கள் காதலும், காதல் சார்ந்த கதைகளாக அமைந்ததால் `காதல் மன்னன்’ பட்டத்தோடு வலம் வந்தார்.

`காதல் மன்னன்’ அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். இப்படம் மேட்ச்லெஸ் பைக்கில் வலம்வரும் ஒரு ஸ்டைலான அஜித்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, அப்போதைய புதுமுக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் `வாலி’ திரைப்படம் அஜித்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. 1999இல், சரண் இயக்கத்தில் வெளியான `அமர்க்களம்’ திரைப்படம் மூலம் அவரை `அல்டிமேட் ஸ்டார்’ எனக் கூறிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது இன்னொரு கூட்டம்.

இந்த இரு தரப்பு ரசிகர்களும் `தல ரசிகன்’ என்ற புள்ளியில் இணைந்தார்கள். 'முகவரி' படத்தின் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் இருந்த இயல்பு, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இருந்த கேஷுவலான நடிப்பு, கண்களாலேயே வில்லத்தனம் காட்டிய `வாலி' என திரையில் அஜித் மிரட்டுவார்.

ரஜினியின் நடிப்பில் வெளியான 'பில்லா' திரைப்படத்தை ரீ-மேக் செய்யப்போவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன், ரஜினியிடம் கூறினார். ஹீரோவாக அஜித் நடிக்கிறார் என்பதைத் தெரிந்தவுடன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டாராம் ரஜினி. படத்தின் ஒட்டுமொத்த கதையும் மலேசியாவில் நடக்கக்கூடியவை. கதையில் சிறு மாற்றம் வேண்டும் என்று நினைத்த விஷ்ணுவர்தன், அஜித்தை இன்டர்நேஷனல் டானாக சித்திரித்து, படத்தை மலேசியாவில் பயணிக்கச் செய்திருப்பார். மலேசியா மட்டுமல்லாது படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் இன்ச் பை இன்சாக அழகாய் காட்டியிருக்கும் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு.

படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று இயக்குநர் விஷ்ணுவர்தன் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தார்.

  1. ஒன்று, அஜித்தின் மற்றப் படங்களைக் காட்டிலும் இதில் அவரை அழகாகவும், ஸ்டைலாகவும் காட்ட வேண்டும்.
  2. இரண்டாவது, அஜித்தின் கேரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

இரு விஷயங்களும் நிறைவேறியதா? என்று கேட்டால் அஜித்தின் ஒவ்வொரு ரசிகர்களும் ஆம் என்று காலரை தூக்கிவிடலாம். மற்றொன்று அஜித்-யுவன் காம்போ. அஜித்தின் ஸ்டைலான நடை, யுவனின் பின்னணி இசை, விஷுவல் என எல்லாமே ஒன்றிணைந்து, பார்க்கும் ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்க்க வைத்தது பில்லா. ஒவ்வொரு நடிகருக்கும் 50ஆவது படம்... 100ஆவது படம்... என்பது மைல்கல். குறிப்பிட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு நடிகருக்கும் உண்டு.

தல அஜித்

அதுபோல அஜித்துக்கு 50ஆவது திரைப்படமான `மங்காத்தா' மாபெரும் வெற்றியைத் தந்தது. அஜித் ரசிகர்களுக்கு மிகப்பிடித்த படங்களில் `மங்காத்தா'வும் ஒன்று. தனது 50ஆவது திரைப்படம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என, நடிகர்களுக்கு பல கனவுகள் இருக்கும். ஆனால் மங்காத்தா படத்தில் அப்படி ஒன்றும் இல்லை. அஜித்தின் சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல். அஜித்துக்காக யுவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய தீம் மியூசிக் இன்றளவும் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தில் நல்லவர் என ஒருவரைக்கூட நாம் பார்க்க முடியாது. படத்தில் ஹீரோ, வில்லன் என எவருமே இல்லை. வில்லன், வில்லாதி வில்லன் எனக் கூறும் அளவுக்கே திரைக்கதை அமைப்பு இருக்கும்.

இமேஜ் பற்றிய கவலை இல்லாமல் நடிப்பது, தன் போக்கில் நடந்துகொள்வது… என அஜித்துக்கு இருக்கும் மனநிலைக்கேற்ப ரசிகர்களின் மன நிலையும் இருக்கிறது. `அல்டிமேட் ஸ்டார்’ என்ற டைட்டில் கார்டு ஓடும்போது கைதட்டி விசில் அடித்த ரசிகர்கள்தான், `இனி எந்தப் பட்டத்தையும் பயன்படுத்த மாட்டேன்' என அஜித் அறிவித்தபோதும் எந்தவித ஆர்ப்பாட்டமின்றி அதனை ஏற்றுக் கொண்டார்கள். 'உழைப்பாளர் தினத்தில் பிறந்ததால்தான் திரைத்துறையில் எங்க தல உழைப்பால் உயர்ந்தார்' என அவரது ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டு பெருமையுடன் கூறிவருகின்றனர்.

2010ஆம் ஆண்டில் திரைத் துறையினர் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில் அஜித் அனைவரையும் வியக்கும்படி ஓர் உரையாற்றியிருந்தார். `சென்சிட்டிவ் சோஷியல் இஷ்யூஸ்களுக்கு எல்லாம் நடிகர்கள் பேசக் கூடாதுனு ஒரு அறிக்கை கொடுங்க ஐயா (கருணாநிதி). யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சரி, அப்போ ஆட்சி செய்யுற முதலமைச்சருக்கு நடிகர்கள் நாங்க எல்லோரும் மரியாதை கொடுப்போம். அதேசமயம் அரசியல் இயக்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் நடிகர்களைப் பங்கேற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துறாங்க. அதை எப்படியாவது நிறுத்துங்க ஐயா' என தன் மனதில் உள்ளதை கருணாநிதியின் முன்னே தைரியமாக பேசினார். இதை இவர் பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமுமே அதிர்ந்தது. முக்கியமாக, ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அமர்ந்தார்.

`மங்காத்தா' பட சமயத்தில் அஜித், தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். காரணம், அஜித் ரசிகர் மன்றங்களை வைத்து செய்யப்பட்ட சில கட்டப் பஞ்சாயத்துகள். பல வன்முறைச் சம்பவங்கள் செய்தியாக வரும்போது, அஜித் மற்றும் அஜித்தின் ரசிகர் மன்றம் என்ற வார்த்தை அடிபட்டதே.

ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகு, ரசிகர்களுடனான உறவு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு, 'எப்போவுமே நான் ரசிகர்கள் மனசுல இருக்கேன். அவங்க என் மனசுல இருக்காங்க. இதுல எனக்கோ, என் ரசிகர்களுக்கோ எந்தக் குழப்பமும் இல்லை' என்று சிம்பிளாக ரசிகர்களின் மனநிலையை பிரதிபலித்தார். இதனையடுத்து, அஜித் பத்திரிகையாளர் சந்திப்பு, நேர்காணல்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என வெளி உலகிலிருந்து ஒதுங்கியே இருந்தார். மனோரமாவின் இறுதிச்சடங்கு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் எனத் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளில் மட்டும் 'தல' தலையைக் காட்டினார்.

`வாழு; வாழவிடு!' இதுதான் அஜித்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் தாரக மந்திரம். இயக்குநர் இல்லாமல் நடிகர் இல்லை என்பதை உணர்ந்தவர் அஜித். திரைக்குள்ளும் பல திறமையானவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். சரண், எஸ்.ஜே.சூர்யா, சரவண சுப்பையா, வி.இசட்.துரை, ராஜகுமாரன், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய், ஜேடி - ஜெர்ரி, சிங்கம்புலி, ராஜுசுந்தரம் எனப் பலருக்கும் இயக்குநர் கனவை நனவாக்கிக் கொடுத்தவர். 'அமர்க்களம்' அவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம்.

'அமர்க்களம்' படத்தில் நடிக்க ஷாலினியிடம் பேசும்போது முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பின் எப்படியோ நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் ஆரம்பித்தது. ஒரு காட்சி ஷாலினியின் கையை கத்தியால் கிழிப்பது போன்று இருக்கும். இதைப் படமாக்கும்போது அஜித் உண்மையிலேயே ஷாலினியின் கையை கிழித்ததால் ரத்தம் வரத் தொடங்கியது. ஒட்டுமொத்த படப்பிடிப்புத் தளமும் உறைந்துபோனது. இதனால், பதறிப்போன அஜித் உடனடியாக தானே ஷாலினிக்கு முதலுதவி செய்தார்.

ஷாலினியுடன் அஜித்

ஷாலினி இனி இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று அனைவரும் நினைக்க, ஷாலினியின் அப்பா, 'ஷாலுவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டா, படம் கண்டிப்பா ஹிட்' என்று சென்டிமென்ட் வசனத்தைப் பேசியிருக்கிறார். இப்படி படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த சின்னச் சின்ன விஷயங்கள், அஜித் - ஷாலியின் காதலுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஒருநாள் வேகமாக இயக்குநர் சரணிடம் சென்று, 'சரண் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடுங்க. ரொம்பநாள் இந்தப் படத்துல நடிச்சேன்னா ஷாலுவை லவ் பண்ணிடுவேன் போல' எனச் சொல்லியிருக்கிறார். பின் இவர்களின் காதல் கல்யாணம்தான் தற்போது வரை உள்ள தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷன்.

அஜித்தை ரசிகர்களுக்கு பிடிக்கக் காரணம்

அஜித்தை காதலிக்கும் ரசிகர்கள்

எந்த விழாக்களிலும் கலந்துகொள்வது இல்லை, சமூகப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. ரசிகர் மன்றங்களையும் வேண்டாமென ஒதுக்கித் தள்ளியவர், யார் நினைத்தாலும் அவ்வளவு எளிதில் அவரைப் பார்க்க முடியாது, பேட்டிகள் கொடுக்கமாட்டார், தொடர் தோல்வியடைந்த பின்னும், ஒரே இயக்குநருடன் படம் பண்ணுபவர். இப்படி பல விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும், அஜித்தை ஏன் பிடிக்கிறது? என்று அஜித் ரசிகர்களிடம் கேட்டால் அவர்களது பதில், 'அஜித் மிகவும் தன்னம்பிக்கையானவர், எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்தவர், விளம்பரங்களை விரும்பாதவர், கார் பைக் ரேஸ்களை விரும்புபவர்' இதுவாகத்தான் இருக்கும்.திரைக்கு வெளியில் அவருக்கு இருக்கும் பிம்பங்களை வைத்துதான் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித்துக்கு `V' சீரிஸ் வெற்றி....

அஜித் ஹீரோவாக நடித்த ஆறாவது தமிழ்ப் படம் `வான்மதி'. இதுதான் அஜித்துக்கு `V' வரிசையில் அமைந்த முதல் படம். `அமராவதி'யில் காலடி எடுத்து வைத்த அஜித்துக்கு, 1995ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த `ஆசை' பெரிய ஹிட். பட்டிதொட்டியெங்கும் அவரை அடையாளப்படுத்தியது. ரிவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் `ஆசை' ஹிட்டடித்த சந்தோஷத்தில் இருந்த அஜித்துக்கு, நான்கு மாத இடைவெளியில் வந்த அடுத்த படம்தான் `வான்மதி'. 1996ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸானது.

மணிரத்னத்துடன் அஜித்

அகத்தியனும் அஜித்தும் இணைந்த முதல் படம் இது. திரையரங்கில் 175 நாள்கள் ஓடி, பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அஜித்தின் திரை வாழ்வில் முதல் மெகா ஹிட் இதுதான். அல்டிமேட் ஸ்டார் ‘தல’யாக மாறிய பிறகு, ஹாட்ரிக் ஹிட் தந்தார். ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ ஆகிய மூன்று படங்களும் பாக்ஸ் ஆபீஸில் நியாயமான வசூல் தந்தன. இதனைத்தொடர்ந்து வந்த படங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றியை தரவில்லை. ஆனால், அவரது நடிப்பில் 'வி' வரிசையில் வந்த படங்களான வாலி, வில்லன், வரலாறு, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகியப் படங்கள் ஃப்ளாப் ஷோவில் இருந்து வெற்றி முத்திரையை கொடுத்தன.

வியாழக்கிழமை மேல் அஜித்துக்கு ஏன் அவ்வளவு பற்று!

அஜித் படத்தின் தலைப்பு, போஸ்டர், டீசர், டிரைலர் என எது வந்தாலும் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். அஜித் படத்தின் டீசர், போஸ்டர், டிரைலர், பட வெளியீடு ஆகியவற்றில் எப்போதும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். அது என்னவென்றால் பெரும்பாலும் இவை அனைத்தும் வியாழக்கிழமையன்று வெளியாகும்.

அந்த வியாழக்கிழமை வெளியிடுவதற்கும் ஒரு காரணமுண்டு. அஜித்துக்கு சாய்பாபாவை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. அந்த நாளில் அவரது பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், தங்கள் முக்கிய நிகழ்வுகளையும் வியாழக்கிழமையிலேயே தொடங்குவர்.

சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் தல அஜித்

விவேகம் படத்தின் பாடல் வியாழக்கிழமை நள்ளிரவு 12.02க்கு வெளியிட்டனர். இது போல் புதிய புதிய முயற்சிகளை தனது படத்தில் அஜித் நிகழ்த்தியுள்ளார். பைக் மெக்கானிக் பையனாக கிரீஸ் டப்பாக்களோடு பழகிக்கொண்டிருந்த அஜித்குமார், பின்னாளில் `காதல் மன்னன்’ - `அல்டிமேட் ஸ்டார்’ என தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த நிலைக்கு தன்னைத் தானே அழைத்துச் சென்று, இன்று தன் ரசிகர்கள் மட்டுமல்லாது பொது மக்களிடையேயும் `தல’ என அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படுகிறார். அவர் வசனத்திலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘தன்மானத்துக்கு ஒரு தகராறுனா தலையே போனாலும்....!’

பிறந்த நாள் வாழ்த்துகள் 'தல'

Last Updated : May 2, 2019, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details