ஐசரி வேலனின் 33ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நடிகர் சங்கத்திற்கு மட்டுமல்ல நடிகர் சமூகத்திற்கு உதவியாக இருக்கின்ற ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலன் நினைவு நாள் இன்று. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் அவருக்கு நன்றி தெரிவிக்கும்போது புதிதாக ஏதாவது ஒன்று கூற வேண்டிய நிலையுள்ளது. ஏனென்றால் அவருடைய உதவிகள் பெருகிக்கொண்டே வருகிறது. கடந்த முறை செய்த உதவியைவிட இந்தாண்டு அதிகளவில் உதவிகளை செய்து வருகிறார். அவரால் பல நாடக கலைஞர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கு நன்றி கூறும் விதமாக இந்த நிகழ்வை நான் எடுத்துக் கொண்டேன்” என்றார்.
நாடக கலைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்: நாசர்
சென்னை: நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு 70 விழுக்காடு நாடக கலைஞர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியுள்ளார்.
நலிந்த கலைஞர்கள் உங்கள் நிர்வாகத்தின் கீழ் எந்த அளவுக்கு பயன் பெற்றுள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது சங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாடக கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் வயதுக்கேற்ப அவர்களுக்கான உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் பாரபட்சமின்றி உதவி செய்து வருகிறோம். கடந்தாண்டை விட தற்போது 70 விழுக்காடு நாடகக் கலைஞர்கள் பயன்பெறுகின்றனர்” என்றார். மேலும் அவரிடம், சமீபத்தில் கமல் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு கருத்து கூற மறுத்துவிட்டார்.