சென்னை: பியர் கிரில்ஸுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்திருக்கும் சாகசம் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று டிஸ்கவரி தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற Man vs Wild தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையடுத்து இந்த நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியைத் தயாரித்த டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், ரஜினிகாந்துடன் இணைந்து நிகழ்ச்சி தயாரித்துள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் பிரபலமான Man vs Wild என்ற அந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் என்ற சாகச வீரர் அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் பல சாகசங்கள் செய்வார்.
இதில் பல்வேறு முக்கிய பிரபலங்களையும் பேட்டி கண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜுலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியும் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் படமாக்கப்பட்ட Man vs Wild நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றது.