தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஒரு படத்தை மட்டும் இயக்குபவர் மிஷ்கின். அது என்ன ஆண்டுக்கு ஒரு படம்தானா என நீங்கள் நினைக்கலாம். ஒரு படம் இயக்கினாலும் அது வெற்றிப் படமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் மிஷ்கின்.
இவரது இயற்பெயர் சண்முக ராஜா; அதை அவரே மாற்றிக்கொண்டார். ரஷ்ய மொழி எழுத்தாளர் ஒருவரின் நூலால் ஈர்க்கப்பட்ட இவர், அதில் வரும் இளவரசர் கதாபாத்திரத்தின் பெயரான மிஷ்கின் என்பதைத் தனது பெயராகச் சூட்டிக்கொண்டார். சிறு வயது முதல் புத்தக வாசிப்புப் பழக்கம் கொண்ட இவர் புத்தகம் படிப்பதிலேயே தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துள்ளார்.
சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் 2006ஆம் ஆண்டு திரைத் துறைக்குள் நுழைந்தார். இவர் இயக்கிய முதல் படமே அந்த ஆண்டு வெற்றிப் படங்களில் ஒன்றானது. அவரது அடுத்த படமான, 'அஞ்சாதே' இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு வெளியானது.
நண்பர்களாக இருக்கும் நரேனும்-அஜ்மலும் எதிரியாக மாறுவதும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிக நேர்த்தியாகச் செதுக்கியிருப்பார் மிஷ்கின். தொடர்ந்து இவரது படங்கள் ஹிட் கொடுத்ததால், அடுத்தடுத்து இவர் இயக்கும் படங்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தொடர்ந்து, 'நந்தலாலா', 'யுத்தம் செய்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்று ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்தாலும் அவற்றை வெற்றிப் படங்களாக்கி கொடுத்து, முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். பொதுவாகத் தமிழ்த் திரை ரசிகர்களுக்குப் பேய் படம் என்றாலே பிடிக்கும். பேய் என்றால் மிகவும் ஆக்ரோஷமாக அடுத்தவர்களைப் பழிவாங்கத் தான் ஆவியாக அலைகிறது என நாம் சிறுவயது முதல் அனைவரும் சொல்லி கேட்டிருக்கிறோம்.