தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். இவரது படங்கள் அடிக்கடி அரசியல் சர்ச்சைகளில் சிக்குவதால், விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் அவ்வப்போது அடிபடுவதுண்டு. இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றினார். தொடர்ந்து அதற்கென்று ஒரு கொடியையும் உருவாக்கினார்.
அவ்வப்போது அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியலுக்கு வருவதற்கான ஆசையை துளிர் விட்டே வருகிறார். இதனிடையே சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரிசியல் கட்சி தொடங்கினார்.
அக்கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக அவரது தாயார் ஷோபா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து எனக்கும் எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. எனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் தெரிவித்திருந்தார்.