தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத மிக முக்கியமான நடிகை ராதிகா ஆப்தே. தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அவர் நடித்த திரைப்படங்களில், ‘கபாலி’ படத்தில் வரும் குமுதவள்ளி கதாபாத்திரம் மட்டுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்தியிருப்பார். கணவன் கபாலிக்கு அறிவுரை வழங்கும்போதும், அன்பாக பார்க்கும்போதும் குமுதவள்ளியாக மாறியிருப்பார் ராதிகா ஆப்தே. எனினும் ‘கபாலி’ அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை.
ராதிகா ஆப்தே - குமுதவள்ளி ராதிகாவின் ‘ஃபோபியா’
பறவையைத் தேடி அலைகிறது கூண்டு
- ஃப்ரான்ஸ் காஃப்கா
ராதிகா ஆப்தே: 10 நிமிசா என்னையே பார்த்துகிட்டு இருந்தார்
ஏன் அப்படி பார்க்குறிங்க, எதுவும் பிரச்னையா சார்?
வயதானவர்: உங்கள ஏற்கனவே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..
ராதிகா ஆப்தே: நான் நடக்க ஆரம்பிச்சுட்டேன், என்கிட்ட அப்படி கேட்டவருக்கு வயது 70 இருக்கும்..
ராதிகா நண்பர்கள்: ஆசை அடங்காத அங்கிள்னு சொல்லு
ராதிகா ஆப்தே: சரி யார மாதிரி இருக்கேன்னு அவர்கிட்ட கேட்டேன்? , யாராவது சொல்லுங்க
ராதிகா நண்பர்கள்: அவங்க அம்மா, அவர் பயாலஜி டீச்சர் ...
ராதிகா ஆப்தே: இல்ல, அவர் வீட்டு நாய் மாதிரி இருக்கேனாம் ... ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி அவர் பிரின்சஸ்னு செல்லமா ஒரு நாய் வளர்த்துருக்கார். ஒருநாள் அந்த நாய் செயின அவுத்துட்டு போய் ரோட்டுல வந்த கார்ல அடிபட்டு செத்துருச்சு. அந்த நாய் இறந்த அதே தேதிதான் என்னோட பிறந்தநாள், அந்த நாய் கழுத்துல கார் ஏறிருக்கு, நான் பிறந்தபோதும் என் கழுத்துல ஒரு மார்க் இருந்துச்சு ...
ராதிகா ஆப்தே நண்பர்கள் திகிலுடன் முழிக்க.. பவ் என கொலைக்கிறார் ராதிகா...
இப்படியாக ஆரம்பமாகிறது ராதிகா ஆப்தே சோலோ பெர்பார்மன்ஸில் அசத்திய ‘ஃபோபியா’ திரைப்படம். அகோராஃபோபியா (agoraphobia) என்பது சுற்றுச்சூழலை அழுத்தமானதாக, பயம் மிகுந்ததாக, உதயவியற்ற நிலையில் இருப்பதாக உணர்வது. அகோராஃபோபியா இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற பயப்படுவதுதான் அதன் உச்சகட்ட நிலை. இந்த பாதிப்புள்ள பெண்மணியாக ராதிகா ஆப்தே நடித்த திரைப்படம் ‘ஃபோபியா’. 2016ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், ராதிகா ஆப்தேவின் நடிப்பு சினிமா விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
திரையில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்துகிற திறமையுள்ள நடிகைகளால் மட்டுமே சோலோவாக நடிக்க முடிவதை காண்கிறோம். அந்த வகையில் ராதிகா ஆப்தே தன் நடிப்பால் நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர், சைக்கலாஜிகல் த்ரில்லர் படமான ‘ஃபோபியா’வில் அவருக்கு அதிகமான க்ளோஸ் ஷாட் வைக்கப்பட்டிருக்கும். அதன்மூலமாக பய உணர்வை நமக்குள் கடத்திவிடுவார் ராதிகா. அவர் படங்களில் தவறவிடக் கூடாத படம் ‘ஃபோபியா’
பார்ச்ட் சர்ச்சை
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசும் ‘பார்ச்ட்’ எனும் படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர், சர்ச்சையாக வேண்டுமென்றே இதுபோன்ற நிர்வாண காட்சிகளில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
ராதிகா: சர்ச்சையை ஏற்படுத்துவது நீங்கள்தான், அந்தக் காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திருப்பீர்கள், சர்ச்சையை ஏற்படுத்த விரும்புவது நீங்கள்தான்.
நான் ஒரு கலைஞர், என் படத்துக்கு தேவையான காட்சி எப்படி இருந்தாலும் நான் கண்டிப்பாக நடித்துக் கொடுப்பேன். உங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாக்களை பாருங்கள், அவர்கள் சினிமாவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை கவனியுங்கள். தன்னுடைய சொந்த உடலை அசிங்கமாக கருதும் மக்களுக்குதான் மற்றவர்கள் உடல் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கும். நீங்கள் நிர்வாணமான உடலை பார்க்க விரும்பினால், என்னுடைய வீடியோ கிளிப்பை பார்ப்பதை விடுத்து நாளை முதல் உங்கள் உடலை நிர்வாணமாக பாருங்கள், அதன்பிறகு இதைப் பற்றி பேசலாம் என ராதிகா சொல்லி முடித்ததும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது.
ஸ்டீரியோடைப்பை (ஒரே மாதிரியாக) உடைத்து நடிக்கக் கூடிய வெகு சில கதாநாயகிகளில் ராதிகா ஆப்தே முக்கியமானவர். இன்று அவரது 34ஆவது பிறந்தநாள். அவரது திரைப்பயணம் தொடர வாழ்த்துகள்..