தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் நக்கல் மன்னன், காமெடி குடோன், காமெடி டிப்போ கவுண்டமணிக்கு முக்கியமான இடமுண்டு. அதிகார வர்க்கம் முதல் அடித்தட்டு மக்கள்வரை ஒருத்தரையும் விடாமல் கலாய்ப்பது கவுண்டமணியின் சிறப்பு. மக்களவை தேர்தல் முடிந்தவுடன் நக்கல் மன்னன் பிறந்தநாள் வந்திருப்பது மிகச் சிறப்பு, கவுண்டமணிக்கு அரசியல்வாதிகள் என்றால் தனி பிரியம். ரொம்ப அழகா கழுவி ஊத்துவாரு, ’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ’என்னடா பெரிய எம்.எல்.ஏ பொடலங்கா எம்.எல்.ஏ, பிறக்கும்போதே எம்.எல்.ஏ எம்.எல்.ஏனுட்டு பிறந்தானா’ போன்ற வசனங்களை கேட்டு அரசியல்வாதிகளே சிரிக்காமல் இல்லை.
கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன் கருப்பையா, உடுமலைப்பேட்டை வல்லகுண்டாபுரத்தில் 1939ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தவர். கவுண்டமணியின் வாழ்க்கை வரலாற்றை புரட்டாமல், அவர் ரியல் லைஃபில் கொடுத்த கவுன்ட்டர்களையும், சில சுவாரஸ்ய சம்பவங்களையும் பார்ப்போம்.
கவுண்டமணி பல்வேறு மொழிப் படங்களையும் தேடித்தேடி பார்க்கக் கூடியவர்.
சமூகத்தில் நிகழும் அத்தனை விஷயங்களிலும் அப்டேட்டாக இருக்கக்கூடியவர். நடிகர் சந்தானம், கவுண்டமணியிடம் அடிக்கடி மொபைலில் பேசுவது வழக்கமாம்! அப்படி ஒருமுறை கவுண்டமணிக்கு அழைத்து, சரியில்லை என பலரால் விமர்சிக்கப்பட்ட படத்துக்கு போவதாக சொல்லியிருக்கிறார், அதற்கு கவுண்டமணி, ஏம்பா தனியா போறியே பயமா இல்லையானு கேட்டாராம்! அந்தப் படம் எந்த அளவு ஓடுகிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பதற்காக சந்தானம் இதை ஒரு மேடையில் சுட்டிக்காட்டி பேசியிருப்பார்.
அதேபோல் இயக்குநர் ராமதாஸ் ஒருமுறை கவுண்டமணி வீட்டுக்கு சென்றிருக்கிறார். கவுண்டமணி அருகே ஒரு நாய் அமர்ந்திருக்கிறது. ராமதாஸ், ’ஏங்க இதுக்கு என்ன பேர்னு’ கவுண்டமணியை கேட்க, ’அதுக்கு என்ன பேர், நாய்தான். அதுக்கு தனியா ஒரு பேர் வச்சு அதவேற நியாபகம் வச்சு கூப்டுட்டு திரியனுமா’? என கவுன்ட்டர் கொடுத்திருக்கிறார்.
கவுண்டமணியோடு பல முன்னணி நடிகர்கள் கூட்டணி அமைத்து காமெடி செய்திருந்தாலும்,சத்யராஜ் - கவுண்டமணி ஜோடியை அடிச்சுக்க ஆளே இல்லை எனலாம். இருவரும் சேர்ந்து செய்யும் காமெடியில் மொத்த படக்குழுவும் சிரித்து, பல டேக்குகள் போகுமாம் சில காட்சிகள். கவுண்டமணி அரசியல்வாதிகளை கலாய்ப்பதை அரசியல்வாதிகளே ரசிப்பார்கள் என சத்யராஜ் ஒரு மேடையில் சொல்லியிருப்பார். இருவரும் சூட்டிங்கில் இருக்கும்போது ஒருமுறை ஒரு எம்.எல்.ஏ வந்து கவுண்டமணியை சந்தித்திருக்கிறார். ஏதோ ஒரு படத்தை சொல்லி, ’நீங்க எங்களதான் கலாய்ச்சிங்கனு தெரியுது, இருந்தாலும் நல்லா இருந்துச்சுங்கனு’ சொல்லிட்டு போனதா சொல்லுவார்.
டைரக்டர் ஒருவர் நடிகராகும் முடிவெடுத்திருக்கிறார். அவர் சூட்டிங் ஸ்பாட் அருகே சத்யராஜ் - கவுண்டமணிக்கு சூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இடைவேளையில் இவர்களை பார்க்க அந்த டைரக்டர் வந்திருக்கிறார். என்னப்பா ஹீரோ ஆகிட்ட போலனு கவுண்டமணி கேட்க, ”அட ஆமாங்க, ஒரு ஸ்கூலுக்கு போனேன் அங்க இருந்த பசங்க நீங்களே அழகா இருக்கிங்க, ஹீரோவா நடிச்சுறலாம்னு சொன்னாங்க அதான்னு” சொல்லிருக்கார். அதற்கு கவுண்டமணி, ”அது ப்ளைண்ட் ஸ்கூலா இருக்கும்பா” அப்டினு சொல்லிருக்கார். டைரக்டர் எதுவும் பேசாம இடத்தை காலி பண்ணிட்டாராம்!
கவுண்டமணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதோ, திரைப்பட விழாக்களில் கலந்துகொள்வதோ பிடிக்காத ஒன்று, அவர் வாய் அப்படி! தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்த, தமிழ் திரைப்பட நடிகர் சங்கம்னு மாத்தனும்னு பிரச்னை போயிட்டிருந்தது பற்றி கவுண்டமணிக்கிட்ட கருத்து கேட்டாங்க! நீங்க வெறும் நடிகர் சங்கம்னு வைங்க போதும்னு போயிட்டார்.
தற்போதெல்லாம் தமிழ் திரைப்படங்கள் நீண்டநாட்கள் ஓடுவதில்லை. அதிகமான படங்கள் வெளியாகிறது, திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல் குறித்து கவுண்டமணி, ”இப்பலாம படம் பார்க்குற ஆளுகளவிட நடிக்கிற ஆளுக அதிகமாகிட்டாங்கப்பா” அப்டினு சொல்லிருப்பார். தொடர்ந்து படங்களில் நடிக்காவிட்டாலும் மீம் டெம்ப்ளேட், வீடியோ மீம்ஸ் என இணைய உலகில் நம்மோடு கலந்திருக்கும் நக்கல் மன்னனுக்கு ஈடிவி பாரத் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.