மலையாளத்தில் 'ஆமென்', 'அங்கமாலி டைரீஸ்', 'ஈ.மா.யூ.', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் லிஜோ ஜோஸ் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கேரள திரையுலக வரலாற்றின் மிக முக்கிய படங்களாக மாறியுள்ளது.
இவர் கடைசியாக இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை குவித்தது. அதுமட்டுமல்லாது சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் தனக்கு மிக பிடித்த இயக்குநர்களில் ஒருவராக லிஜோ ஜோஸ் பெல்லிசேரியை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், லிஜோ தனது சமூக வலைதளப்பக்கமான பேஸ்புக்கில் அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "எனக்கு சினிமா என்பது பணம் சம்பாதிக்கும் இயந்திரம் அல்ல. எனது பார்வையை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்.
எனவே இன்றிலிருந்து நான் ஒரு சுயாதீன இயக்குநராக மாறுகிறேன். சினிமாவில் எனக்கு கிடைக்கும் பணத்தை மேலும் நல்ல சினிமா எடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவேன். வேறெதற்காவும் அல்ல. எங்கு சரி என்று எனக்குப் படுகிறதோ அங்கெல்லாம் எனது திரைப்படத்தைத் திரையிடுவேன். ஏனென்றால் நான் அதை உருவாக்கியவன்.
நாம் ஒரு நோய்த்தொற்று சூழலில் - போர்சூழலில் இருக்கிறோம். வேலைவாய்ப்பு இல்லை. அங்கீகாரம் கிடைக்காத நெருக்கடி. ஏழ்மை, மத ரீதியிலான பதற்றம். வீட்டை அடைய 1,000 மைல்கள் நடந்தே செல்லும் மக்கள். மன அழுத்தத்தில் இறந்து போகும் கலைஞர்கள் என ஒரு சூழல்.
எனவே மக்களுக்கு ஒரு உந்துதலைத் தர. அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க கலையை உருவாக்க வேண்டிய நேரம் இது. உயிர் வாழத் தேவையான சிறிய நம்பிக்கைய ஏதோ ஒரு வடிவத்தில் அவர்களுக்குத் தர வேண்டும்.
எங்களை வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லாதீர்கள். எங்கள் படைப்புகளைத் தடுக்காதீர்கள். எங்கள் நேர்மையைச் சந்தேகப்படாதீர்கள். எங்கள் சுய மரியாதையை கேள்விக்குள்ளாக்காதீர்கள். உங்களுக்கு மோசமான இழப்பு நேரிடும். ஏனென்றால் நாங்கள் கலைஞர்கள்! லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, சுயாதீன திரைப்பட இயக்குநர்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை நெட்டிசன்கள் பலர் வரேவற்றும் ஆதரவளித்தும் வருகின்றனர்.
லிஜோ ஜோஸ் ஃபேஸ்புக் பதிவு