த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன், இயக்குநர் பா.இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை சித்திரவதை செய்து கொன்றனர். இதைக் கதையின் மையக்கருவாக வைத்து 'ஜெய் பீம்' திரைப்படம் உருவானது.
இந்நிலையில், தமிழ் சினிமாவிற்கு சூர்யாவை 'நேருக்கு நேர்' படம் மூலம் அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் 'ஜெய் பீம்' படத்தைப்பார்த்து வெகுவாக பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " அன்புள்ள சூர்யாவிற்கு, முதல் வரிசை நட்சத்திரங்கள் நடிக்கும் போது தான் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றிய திரைப்படங்கள், முக்கிய கவனம் பெறுகிறது.
நல்ல படம் எடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் எடுக்கிறார்கள்? நட்சத்திர நடிகர், கோடிகளில் வியாபாரம், சமூக வலைத்தளத்திலும், சமூகத்திலும் லட்சக்கணக்கில் பின் தொடரும் ரசிகர்கள் இத்தனை பேரையும் எப்போதும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம்.
இவை அனைத்தையும் தாண்டி, நான் நல்ல படத்தில் நடிப்பேன்...நல்ல படத்தில் தான் நடிப்பேன்...நல்ல படம் தான் எடுப்பேன் என்ற உங்கள் பிடிவாதத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. எழுதி இயக்கிய ஞான வேலுக்கும், லிஜோமோள் ஜோஸ், கே. மணிகண்டன், குரு சோமசுந்தரம், தமிழ், பிரகாஷ்ராஜ், ராஜிஷா விஜயன், தயாரிப்பாளர் ஜோ-விற்கும் எனது பாராட்டுக்கள்.'ஜெய்பீம்' உங்கள் திரை வாழக்கையில் ஒரு மைல் கல்" என குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த கடிதத்துக்கு சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில், " நல்ல கலைஞர்களை களம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் தங்களிடமிருந்து நாங்கள் பெறும் ஒவ்வொரு பாராட்டும், எங்கள் மனதிற்கு மிக நெருக்கமானது. தங்கள் வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்