கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்து 50 நாLகளுக்கும் மேலாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.
இதனையடுத்து பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனா தடுப்பு நிவாரண நிதியை திரட்டும் விதமாக பேஸ்புக் லைவ்வில் பாட்டு பாடி நிதி திரட்டும் வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளார்.
இதுகுறித்து பாலசுப்ரமணியம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறுகையில், "வாரத்திற்கு நான்கு நாள்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என நான் பாடிய பாடல்களைக் கேட்க விரும்புபவர்கள் தனது அறக்கட்டளைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 100 அளித்தால்கூட அவர்களுக்காக அந்தப் பாடலைப் பாடுவேன்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்து இன்றுவரை இசை சேவை கரோனா நிவாரண நிதி வசூலுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளேன். இதன் மூலம் ஆரம்பத்தில் ரூ.5 லட்சம் நிதி கிடைத்தது” என்றார்.
எஸ்பிபி இதுவரை மேடைகளில் பாடாத பாடல்களை பாடி இதில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். பழைய, புதிய பாடல்கள் என பல மொழிகளிலும் ரசிகர்கள் கேட்கும் பாடல்களைக் எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் அவருடைய குரலில் கேட்பதில் இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் எஸ்பிபி அதுமட்டுமின்றி, நன்கொடை அளிக்கும் ஒவ்வொருவரின் பெயர், ஊரைக் குறிப்பிட்டு அவர் பாடுவதைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.ரசிகர்கள் நன்கொடை அளிப்பதற்காக அவருடைய அறக்கட்டளை வங்கிக் கணக்கையும் எஸ்பிபிகொடுத்துள்ளார். முழுக்க முழுக்க இது பேஸ்புக்கில் மட்டுமே நடக்கும் ஒரு இசை நிகழ்வாகும்.