சென்னை: தமிழில் ‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் தங்கதுரை. இவர் சமீபத்தில் ஆர்யா நடிப்பில், அமேசான் ப்ரைமில் வெளியான சார்பட்டா படத்தில் நடித்திருந்தார். குத்துசண்டை போட்டியை வர்ணிக்கும் வர்ணனையாளராக தங்கராஜ் நடித்தார்.
இவருக்கு 'பழைய ஜோக்' தங்கதுரை என்ற அடைமொழியும் உண்டு. இந்நிலையில் 'சார்பட்டா' படத்தில் நடித்த அனுபவம் குறித்த தனது அனுபவத்தை தங்கதுரை கூறியுள்ளார்.
'சார்பட்டா' திருப்பு முனை
இதுகுறித்து அவர் கூறியதாவது, 'சார்பட்டா பரம்பரை’ எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்னு சொல்லலாம். ஏற்கனவே பல படங்கள் பண்ணியிருந்தாலும் இந்தப் படம் என்னை உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது.
காரைக்குடியில் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புக்கு போனால் ‘செமையா பண்ணியிருந்தீங்க தங்கம்’னு சூர்யா சார் பாராட்டுகிறார். இந்த பெருமை எல்லாம் பா.இரஞ்சித்தையே சேரும். பா.இரஞ்சித் சார் ரொம்ப பொறுமைசாலி.
எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நடிகர், நடிகைகளிடம் டென்ஷன் இல்லாமல் கூலாக வேலை வாங்குவார். ‘கபாலி’ டைம்ல பா.இரஞ்சித்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அதன் பிறகு நான், வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். ‘சார்பட்டா’வில் என்னை ஞாபகம் வைத்து பா.இரஞ்சித் வாய்ப்பு கொடுத்தார்.
படத்துல என்னுடைய லுக், ஸ்டைல் பேசப்படுகிறது என்றால் அதுக்கு இரஞ்சித் சார் தான் காரணம். முக்கியத்துவம் உள்ள வர்ணனையாளர் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தார்.
'சார்பட்டா' ஜாலியான டீம்
படப்பிடிப்பில் நான் சிறப்பாக செயல்பட்டால் யூனிட்ல உள்ளவங்களை கைதட்டச் சொல்லி என்னை இரஞ்சித் சார் உற்சாகப்படுத்துவார். ஆர்யா, பசுபதி ஜி.எம்.சுந்தர், கலையரசன், காளிவெங்கட், ஜான்விஜய் உட்பட மொத்த டீமும் ஜாலியாக பழகினார்கள்.
படம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதற்கு அனைவரும் கொடுத்த உழைப்புதான் காரணம். படத்தின் பின்னணி வேலைகள் நடக்கும்போதே சந்தோஷ் நாரயணன் பாராட்டினார். அதுதான் ‘சார்பட்டா’வுக்கு எனக்கு கிடைத்த முதல் பாராட்டு.
விரைவில் வெளிவரவுள்ள யோகிபாபுவின் ‘பன்னிகுட்டி’, சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திக் இயக்கும் ‘ஜாங்கோ’, ரியோவின் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’, மதிமாறன் இயக்கும் ‘செல்ஃபி, ஆதியின் ‘பார்ட்னர்’, சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’ போன்ற படங்களில் வெரைட்டியான தங்கதுரையை பார்க்கலாம்.
ஏராளமான படங்கள் கைவசம்
காமெடி நடிகராக அறிமுகமானாலும் இயக்குநர்கள் என்னை எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணக்கூடிய பெர்பாமராக பார்க்கிறார்கள். காமெடி தாண்டி நிறைய வெரைட்டியான கேரக்டர்ஸ் பண்றேன்.
இப்போது, ‘சார்பட்டா’ வெற்றிக்கான பலனாக பல படங்கள் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா- பாண்டிராஜ் இணைந்திருக்கும்‘ எதற்கும் துணிந்தவன்’, கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், சிபிராஜ் நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், சன்னிலியோன் நடிக்கும் படம் உள்பட ஏராளமான படங்கள் கைவசம் இருக்கிறது.
காமெடிதான் களம்
சில ஹீரோ வாய்ப்பும் வந்தது. காமெடிதான் என்னுடைய களம். அதனால் காமெடியில்தான் என்னுடைய கவனம் இருக்கும். காமெடி நடிகராக இருந்தால் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கலாம்.
காமெடிக்கு எப்போதும் ரசிகர்கள் இருப்பார்கள். வில்லனுக்கு கைத்தட்டல் கிடைக்காது. ஆனால் காமெடியனுக்கு க்ளாப், மீம்ஸ் பின்னியெடுக்கும். காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்ல முடியும். முக்கியமா, காமெடி நடிகர்களுக்கு ஃபைட் இருக்காது. அதிலிருந்தும் தப்பிக்கலாம்.
பொது முடக்கம் காலத்தில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. கரோனா தொற்று வந்த பிறகு நம் வாழ்க்கை நிரந்தரம் கிடையாது என்று புரிய வைத்துள்ளது. இயற்கை தனது முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. மக்களின் ஆதரவும் கலை உலகத்தினரின் அன்பும்தான் என்னை நாடறிந்த நடிகனாக மாற்றியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: 'சார்பட்டா' பரம்பரை இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு அதிமுக அனுப்பிய நோட்டீஸ் - ஏன் தெரியுமா?