மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் ரஜினிகாந்த் - இயக்குநர் சேரன்
ரஜினியுடன் இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று அச்சுறுத்தலால் வீட்டிலிருக்கும் திரைப் பிரபலங்கள் ரசிகருடன் தங்களது சமூக வலைதள பக்கம் வாயிலாக தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இந்த காலகட்டத்தில் ரசிகர்கள் பலர் இயக்குநர் சேரனின் படங்களை பார்த்து தங்களது கருத்துக்களை சேரனின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் கருத்துக்களுக்கு சேரன் பதில் அளித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது அரசின் செயல்பாடுகள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் சேரனின் ட்விட்டர் பக்கத்தில், "அருணாச்சலம்"(1997) படத்தின் 202ஆவது நாள் வெற்றிவிழா மேடையில் இயக்குனர் சேரனை 'பொற்காலம்'(1997) படம் கொடுத்ததற்க்காக அழைத்து தங்கச்சங்கிலி பரிசாக அணிவித்து அவரை கவுரவித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்' என்ற கருத்தை அழகாக சொல்லியிருந்த இயக்குனர் சேரனை இந்த மேடையில் வாழ்த்த ஆசைபடுகிறேன்” என்று கூறி பொற்காலம் பட டைரக்டர் சேரனை அழைத்தா் ரஜினிகாந்த் . இப்படி கூறியதை கேட்டு ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ச்சியாக மேடை ஏறி பரிசு பெற்றார் சேரன்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திருக்கும் இயக்குநர் சேரனுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை இருவரின் பிறந்தநாளும் டிசம்பர் 12 ஆகும் என்று பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக சேரன், "மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமார பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்..
அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர.. நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது.. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது.. காரணம் அந்த மனிதத்தன்மை" என பதிலளித்துள்ளார்.