புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் படம் அருவம். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். இந்த படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சாய்சேகர், சித்தார்த், கேத்ரின் தெரசா, சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் படம் குறித்து சாய் சேகர் பேசுகையில், சித்தார்த் நிஜத்தில் சுத்தத்தை போற்றக்கூடியவர், உயிர்களை நேசிப்பவர். அவர் தான் இந்தப் படத்திற்கு வேண்டும் என்று நினைத்து எழுதியது தான் அருவம். அருவம் என்பது உருவம் இல்லாத ஒன்று. கதையில் அதற்கான காரணம் இருக்கும்.
கேத்ரின் தெரசாவை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறோம். ஆனால் அவர் தன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து உழைத்துள்ளார். பின்னணி இசையில் அற்புதம் செய்துள்ளார் தமன். படம் நன்றாக வந்திருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை என்றார்.
சித்தார்த் - கேத்ரின் தெரசா- சதீஷ் சித்தார்த் பேசுகையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் என்னிடம் கமர்ஷியல் கதை இருக்கு கேட்குறீங்களா என்றார். நான் எப்போதும் ரொம்ப தேர்ந்தெடுத்துதான் படம் செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் நான் எனது படத்தை எல்லோரும் பார்க்கவேண்டும் என்றுதான் செய்கிறேன்.
இப்படத்தில் நம் உணவில் கலப்படம் பரவுவதை பற்றிய கதையம்சம் உள்ளது. எனது கேரக்டர் சமூகத்தின் மீது கோபமுள்ள கேரக்டர், எனக்கு உண்மையில் பொருந்தி போகக்கூடியது. அதற்காகத்தான் இந்தப் படம் செய்தேன்.
கேத்ரினுக்கு இந்தப் படத்தில் மிகவும் கனமான கேரக்டர். எப்போதும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கு பாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்தப் படத்தில் அது சரியாக அமைந்துள்ளது.
சதீஷை காமெடியனாகத்தான் எல்லோரும் நினைக்கிறோம், ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான குணச்சித்திர நடிகர் உள்ளார். அதை இந்தப் படத்தில் பார்க்கலாம் . நிறைய உழைத்திருக்கிறோம் என்றார்.
கேத்ரின் தெரசா பேசுகையில், பெண் பாத்திரத்திற்கான முக்கியத்துவம்தான் அருவம் படத்தின் கதை. இக்கதையை கேட்டபோதே எனக்கு பிடித்தது. ஜோதி எனும் கேரக்டர் செய்வதில் உள்ள சாவால்களை விரும்பி ஏற்றேன். சித்தார்த் உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் சீரியஸானவர் என நினத்தேன் ஆனால் அவர் ஜாலியாக இருந்தார். சதீஷ் பேசுகையில், இந்தப் படம் பேய்ப் படம் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு பேயுடன் ஒரு காட்சிகூட இல்லை. அடுத்த பாகத்தில் வருமென நினைக்கிறேன். சித்தார்த் எனக்கு எப்போதும் நல்ல நண்பர். அவருடன் என் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. கேத்ரின் தெரசாவுடன் எனக்கு இது இரண்டாவது படம். 'கலகலப்பு 2' வில் தங்கையாக நடித்தார். எனக்கு ஜோடியாகத்தான் சுந்தர் சி யிடம் கேட்டேன். ஆனால் தரவில்லை என்றார்.
இதையும் படிங்க: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' - முக்கிய வேடத்தில் தனுஷ் மச்சான்!