தணிக்கை செய்யப்படாத ஆரண்யகாண்டம் படத்தை தேடும் அனுராக் காஷ்யப்
மும்பை: தன்னிடமிருந்த தணிக்கை செய்யப்படாத 'ஆரண்யகாண்டம்' திரைப்படத்தின் பதிப்பை தற்போது தேடி வருவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர்களையும், தமிழ் திரைப்படங்களையும் பற்றி பாலிவுட்டில் பேசும் முக்கிய நபர்களில் ஒருவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் மாற்று சினிமாவுக்கு பிரபலமான அனுராக், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், சசிகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் குறித்து பலமுறை சிலாகித்து பேசியுள்ளார்.
மேலும், இவர் இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ் ஆஃப் வஸேபூர்' திரைப்படத்திற்கு சுப்ரமணியபுரம்தான் உந்துகோலாக இருந்தது எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அனுராக் காஷ்யப், எனது நூலகத்தை சுத்தம் செய்யும்போது, தணிக்கை செய்யப்படாத ‘நோ ஸ்மோக்கிங்’ திரைப்படத்தின் 150 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவிட் வடிவம் கிடைத்தது. ‘பாம்பே வெல்வெட்’, ‘பிளாக் ஃப்ரைடே’, ஆகிய படங்களின் நீட்டிக்கப்பட்ட பதிப்பு கிடைத்துள்ளது. ‘பாஞ்ச்’ திரைப்படத்தின் பீட்டா வடிவமும் கிடைத்தது.
வெற்றிமாறனின் 'வட சென்னை' திரைப்படத்தின் முதல் வடிவம் சப்டைட்டில் சேர்க்கப்படாத 'சுப்ரமணியபுரம்', தணிக்கை செய்யப்படாத ஃப்ரெஞ்ச் திரைப்படமான 'தித்லி' ஆகியவையும் கிடைத்தன. 'ஆரண்யகாண்டம்' திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று அனுராக் பதிவிட்டுள்ளார்.