இந்தியா முழுவதும் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள், ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் பார்த்திபன் கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ”இன்றைய பாரதத்தில் பிரதம பிரச்னையான கிருமி யுத்தத்தில் மக்களை மீட்டெடுக்க, நமது பாரதம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், வழிநடத்தும் தமிழக அரசுக்கும் அதை செயல்படுத்தும், மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும், இந்த கொடிய நோயிலிருந்து காத்துக்கொள்ளும் சத்தியாகிரக போராட்டமே, இந்த 21 நாள் ஊரடங்கு. 21 நாள் ஒரு நல்ல விஷயத்தை செய்கிறோம் என்றால் அதுவே வாடிக்கையாகி விடும். அதனால் 21 நாளில் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டோம் என்றால் அதை நாம் மறந்து விடுவோம்.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நாம் என்ன செய்தோம் என்று ஒரு நிமிடம் கண்ணை மூடி பார்த்தால் உங்களுக்கு புரியும். உடம்பை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள 21 நாள் தியானம் செய்யுங்கள். அதுவே உங்களுக்கு பழக்கமாகிவிடும். அதேபோன்று நல்ல எண்ணங்களைப் பரப்ப வேண்டும். இந்த நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, அரசு சொல்வதை கேட்டு நடப்பது மக்களாகிய நமது கடமை” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:வருகிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!