தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கண்கலங்கி பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி - கமல் உருக்கம்

கரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த கமல் ஹாசன் தனக்காக கண்கலங்கி பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 4, 2021, 11:26 AM IST

Updated : Dec 4, 2021, 12:33 PM IST

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து டிசம்பர் 1ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து கமல் ஹாசன் முழுவதுமாக மீண்டுவிட்டார் என்றும், இரண்டு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொண்டு, பின்னர் வழக்கமான பணிகளைத் தொடரலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் கமல் ஹாசன் இன்று (டிசம்பர் 4) பணிக்குத் திரும்புவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன்போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.

என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரைத் துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள்.

என்னுடைய விடுப்பை திறம்படச் சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும், விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்ன தானம், ரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காகக் கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல்

பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு நன்றி. எனக்காகக் கலங்கிய கண்களுக்கு நன்றி. தொழுத கரங்களுக்கு நன்றி. என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி. உன்னத உறவுகளைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:kamal haasan health: கரோனாவிலிருந்து மீண்டார் கமல்ஹாசன்

Last Updated : Dec 4, 2021, 12:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details